இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ஜனவரி 5 1967 அன்று இலங்கை வானொலி கூட்டுத்தாபனமாக மாற்றம் பெற்ற போது உருவாக்கப்பட்டதாகும். இலங்கையின் அப்போதைய பிரதமரான டட்லி சேனாநாயக்க மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ரணசிங்க பிரேமதாசாவும் வைபவரீதியான அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர். கூட்டுத்தாபனத்தின் முதல் இயக்குனராக நெவில் ஜயவீர நியமிக்கப்பட்டார்.
வானொலி சேவைகள்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் உள்நாட்டு ஒலிபரப்புக்காக 6 தொடர்ச்சியான பண்பலை (எஃப்.எம்.) சேவைகளை நடத்தி வருகின்றது. அவையாவன:
- சிங்கள சுதேச சேவை
- தமிழ் தேசிய சேவை
- ஆங்கில சேவை
- சிட்டி எஃப்.எம்.
- வெளந்த சேவய (சிங்கள வர்த்தக சேவை)
- தென்றல்
- யாழ் சேவை என்பனவாகும்.
இதில் முதல் மூன்று சேவைகளும் பொதுவான சிங்கள, தமிழ், ஆங்கில நேயர்களுக்காக ஒலிபரப்பப்பட்டாலும் நான்காவது சேவை வாலிபர்களுக்கன விசேட சேவையாகும். கடைசி மூன்று சேவைகளும் தற்கால நிகழ்வுகளுடன் வர்த்தக நோக்கங்களுக்காகவும் ஒலிபரப்பப்படுகின்றது. இவ்வாறு சேவைகளுக்கு மேலதிகமாக விளையாட்டுச் சேவை முக்கிய விளையாட்டு நிகழ்வுகளின் போது மாத்திரம் நாடு முழுவதும் ஒலிபரப்பப்படுகிறது. இவற்றுக்கு மேலதிகமாக, பிரதேச நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இ.ஒ.கூ. நான்கு பிரதேச ஒலிபரப்புகளையும் நடத்தி வருகின்றது.
வெளிநாட்டு நேயர்களுக்காக இ.ஒ.கூ. அலைவீச்சு மட்டிசைக்கப்பட்ட (ஏ.எம்.) சேவைகளை மத்திய மற்றும் சிற்றலை வரிசைகளில் நடத்தி வருகின்றது. இவை தெற்காசியா, மத்திய கிழக்கு நாடுகள், தென்-மேற்கு ஆசிய பிரதேசங்களுக்கு ஆங்கிலம், சிங்களம், ஹிந்தி போன்ற மொழிகளில் ஒலிபரப்பாகின்றன. தென்னிந்தியாவுக்கு ஒலிபரப்புவதற்கான தனிப்பட்ட சேவைகளும் காணப்படுகின்றது.